www.womanofislam.com

Muslim women's online learning centre

முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்


முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வின் இறுதி திருத்தூதர் ஆவார்கள். ஒருவர் முஸ்லிமாகுவதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை விசுவாசிப்பது அடிப்படையாகும். ஒருவர் அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொண்டார். ஆனால் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்று கொள்ளாவிடின் அவர் ஒரு முஸ்லிமாக கருதப்படமாட்டார். அவர் ஒரு இறை நிராகரிப்பாளராகவே கருதப்படுவார்.


மேலும் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வினால் உலகிற்கு அனுப்பப்பட்ட இறுதி திருத்தூதராவார்கள். அன்னவர்களுக்கு அருளப்பட்ட வேதமாகிய அல் குர்ஆனே இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதமாகும். மேலும் இறைவனால் அருளப்பட்ட வேதங்களில் இன்று வரை எவ்வித மாற்றமும் இடம் பெறாமல் இன்னும் பாதுகாக்கப்பட்டுள்ளது.


எனவே, முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை நம்பிக்கை கொண்டு அன்னாரின் போதனைகளை பின்பற்றி அன்னாரின் வாழ்க்கை முறையை ஏற்று நடத்தல் ஒவ்வொரு ஆண் பெண் முஸ்லிமின் மீதும் கடமையாகும்.


முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ரபியுல் அவ்வல் மாதம் 12 ஆம் பிறை திங்கட்கிழமை அதாவது கி.பி. 570 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிலுள்ள மக்கா என்னும் நகரில் பிறந்தார்கள். பெருமானாரின் தந்தையார் பெயர் அப்துல்லாஹ் என்பதாகும். தாயார் பெயர் ஆமினா என்பதாகும். பெருமானாரை அன்னவர்களின் அன்னையார் வயிற்றில் சுமந்துள்ளபோதே அன்னாரின் தந்தையார் காலமானார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஆறு வயதாக இருக்கும்போது தாயார் காலமானார்கள். பின்னர் தம் பாட்டனார் அப்துல் முத்தலிபின் அரவணைப்பில் வளர்ந்து வந்த பெருமானார் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள், தம் பாட்டனாரும் காலமாகவே தம் சிறிய தந்தையார் அபூதாலிபின் பராமரிப்பில் வளர்ந்தார்கள்.


சிறு வயது முதல் ஒழுக்கம், நற்குணம், வெட்கம், தயாளம், நம்பிக்கை என எல்லா நற்குணங்களும் ஒன்று சேர்ந்தாற்போல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வளர்ந்து வந்தார்கள். அன்னாரின் நம்பிக்கை விசுவாசத்தை பார்த்து மெச்சிய மக்காவாசிகள் அன்னாருக்கு "அல் அமீன்" (நம்பிக்கையாளர்) என பெயர் சூட்டி அழைத்தனர். அன்னாரின் உண்மை பேசும் குணத்தை கண்டு வியந்த மக்கள் "அல் ஸாதிக்" (உண்மையாளர்) என புகழாரம் சூட்டினர்.


தம்  இருபத்தைந்தாம் வயதில் மக்காவில் வசித்து வந்த கதீஜா என்னும் நல்லொழுக்கமும் நற்குணமும் நிறைந்த நாற்பது வயது விதவையை மணந்தார்கள் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்.


சிறு வயது முதலே சிலைவணக்கம் புரியாத பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மக்காவிற்கு தொலைவிலுள்ள ஹிரா என்னும் குகையில் தனித்து தியானத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இவ்வாறு பல காலம் மக்களை விட்டு தனித்து அக்குகையில் தியானத்தில் ஈடுபட்டு வருகையிலேயே, முதன் முதலாக அல்லாஹ், வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்களை அனுப்பி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை இறுதி இறைத்தூதராக ஆக்கி உள்ளத்தை அறிவித்தான்.


பின்னர் இறைவனின் தூதை உலகிற்கு எடுத்து கூறினார்கள் பெருமானார் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள். ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களாகிய தங்களை இறைத்தூதராக ஏற்று பின்பற்ற வேண்டும் என்றும் மக்களுக்கு போதித்து வந்தனர். இவ்விருபத்திமூன்று வருடங்களும் சத்தியத்தை எடுத்து சொல்ல அன்னவர்கள் பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் சொல்லில் அடங்காது. ஆனாலும் உலக மக்களின் மீது அளவில்லா அன்பு கொண்ட பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மக்கள் அன்னவர்களை எவ்வளவு சிரமப்படுதினாலும் அவ்வறியா மக்களை நரக நெருப்பில் இருந்து எப்படியேனும் பாதுகாக்கும் நோக்கோடு கடுமையாக உழைத்தார்கள். கல்லடி ஒரு பக்கம், சொல்லடி ஒரு பக்கம். எதிரிகளின் கொலை சூழ்ச்சியினால் கடைசியில் தாங்கள் பிறந்த சொந்த மண்னான மக்கா நகரில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.


தங்களது  ஆருயிர் தோழர் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கூட்டி கொண்டு மக்காவை துறந்து மதீனா நகரை நோக்கி சென்றனர். இந்த சம்பவமே இஸ்லாத்தில் "ஹிஜ்ரத்" என அழைக்கப்படுகிறது. இது நபித்துவம் பிரகடனப்படுத்தப்பட்டு சுமார் பன்னிரண்டு வருடங்களின் பின்னர் இடம்பெற்றது. மதீனாவாசிகள் பெருமானார் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை பெரும் மரியாதையோடும் அன்போடும் வரவேற்றனர்.


பின்னர் தங்கள் வாழ்நாளின் எஞ்சிய காலங்களை அதாவது அடுத்த பத்து வருடங்களை மதீனாவில் கழித்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் லட்சக்கணக்கான மக்களை சத்திய இஸ்லாத்திற்குள் எடுத்தார்கள். தமது இறுதி ஹஜ்ஜின்போது அன்னவர்கள் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரசங்கத்தின்போது சுமார் 124,000 (ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம்) ஸஹாபாக்கள் எனப்படும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் தோழர்கள் பிரசன்னமாகி இருந்தனர் என வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.


தங்களது 63 ஆம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் புனித உடல்  மதீனா பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஹயாதுன் நபி என்பதாகும். அதாவது உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இறைத்தூதர் என்பது அதன் அர்த்தம்.


ஏனெனில், மரணித்தல் என்றால் அன்னவர்கள் மானிடர்களின் சடத்துவ கண்களை விட்டு மறைந்துள்ளார்களே அன்றி மண்ணோடு மண்ணாக அழிந்து போகவில்லை. இது ஒவ்வொரு முஸ்லிமின் அடிப்படை கொள்கையாகும். எனவேதான் இன்றும் ஒவ்வொரு வினாடியும் முழு உலகிலிருந்தும் அன்னவர்களுக்கு முஸ்லிம்கள் ஸலவாத்தும் ஸலாமும் சொல்கின்றனர். மேலும் ஒவ்வொரு தொழுகையிலும் முஸ்லிம்கள் ஸலவாத்தும் ஸலாமும் சொல்கின்றனர். இவற்றின் அடிப்படை சிந்தாந்தம் நாம் சொல்லும் ஸலாத்திற்கும் ஸலாமிற்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பதில் கூறுகிறார்கள் என்பதாகும்.தமிழ் பகுதி → முஹம்மத் நபி ﷺ