www.womanofislam.com

Muslim women's online learning centre

பொறுமையின் சிகரமாகத் திகழ்ந்தவர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்.


ஷைத்தான் மனிதனை ஆக்கிரமிப்பதற்கு அவனுடைய முதல் வேலை மனிதனுக்கு கோபத்தை சீண்டி விடுவதுதான். தேவையில்லாத விடயத்திற்கு ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடிகொண்டிருக்கின்றான் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் நிற்கின்றார் என்று கூடத் தெரியாத அளவுக்கு கடும் சொற்களால் காயப்படுத்துவார். சிலவேளை அதையும் கடந்து சட்டைக்கையை மடக்கி முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். அதேபோல் கோபத்தினால் பல விபரீதமான காரியங்கள் நடப்பதை நாம் காண்கின்றோம்.


மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான். இவருக்கு சமுதாயம் வீரன் என்று பட்டம் சூட்டி விடுமானால் இஸ்லாத்தில் பார்வையில் இவன் வீரனல்ல. வீரன் என்பவன் யாரென்றால் தனக்கு கோபம் வரும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கக் கூடியவன் தான் வீரன் என்று இஸ்லாம் கூறுகின்றது.அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள், அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன் என்று அப்படியானால் வீரன் என்பவன் யார் அல்லாஹ்வின் தூதரே! என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு அன்னவர்கள் கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே (வீரன் ஆவான்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்; அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)


கோபம் மனிதனுக்குத் தேவைதான். அவை இல்லை என்று கூறிடமுடியாது. ஆனால் அதை தேவைக்கேற்ப பிரயோகிக்க வேண்டும். ஒருவரை பழிக்கு பழி வாங்குவதை விட பொறுமையை கடைப்பிடிப்பதே சிறந்தது என்று அல்லாஹ் கூறியுள்ளான். நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது. பொறுமையை கடைப்பிடிப்பீராக! நீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ்விடமே உள்ளது அவர்களுக்காகக் கவலைப்படாதீர்கள். அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கு ஆளாகாதீர்கள். அல்குர்ஆன் (16;126 -127)


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களின் காலத்திற்கு முன்னால் வாழ்ந்த நல்லடியாரான நபி லுக்மான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அல்லாஹ் கூறும்போது அவர்தன் மகனிடம் இறைவனுக்கு இணைவைக்காமல் அவனை மட்டமே வணங்க வேண்டும். பெற்றோருக்கு உதவ வேண்டும், பிறரிடத்தில் அழகிய முறையில் அறிவுரை வழங்கியுள்ளார். சகித்து கொள்ளுதல் என்ற செயலை மிக சிறப்புக்குரிய காரியமாக அவர்கள் தனது மகனிடம் தெளிவுபடுத்தியுள்ளார். என் அருமை மகனே தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையை தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும். அல்குர்ஆன் (31;17)


நாங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களுடன் அவர்களுடைய குழந்தை இப்றாஹீம் வளர்ந்து வந்த ஆபூ னஸஃப் என்ற கொல்லரின் வீட்டிற்கு சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாய்ருடைய கணவராவார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முதத்மிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம் அப்போது இப்றாஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே தாங்களா அழுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் அவ்ஃபின் புதல்வரே! என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு கண்கள் நீரை சொரிகின்றன. உள்ளம் வாடிக்கொண்டிருக்கின்றது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூறமாட்டோம் இப்றாஹீமே நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிக கவலைப்படுகின்றோம் என்றார்கள்.
அறிவிப்பவர்; அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)


இன்னும் இது போன்ற ஏராளமான செய்திகளை அறிந்து கொள்ள உங்களுக்கு எனக்கும் வாழ்நாளை தந்து அருள் புரிவானாக. ஆமீன்!