www.womanofislam.com

Muslim women's online learning centre

பெண்கள் சமுதாயத்தின் ஒளிக் கண்கள்


​​​“இன்னும் அவர்களில் ஒருவன் பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு சுபச் செய்தி கூறப்பட்டால், கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க, அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்ததாக ஆகிவிடுகிறது” அல் குர்ஆன் (16: 58)


‘பெண்கள் சமூகத்தின் விளிப்புண்கள்’ எனக் கருதி வந்த காலத்தில் ‘அவர்கள் சமுதாயத்தின் ஒளிக் கண்கள்’ என இஸ்லாம் கூறி நிரூபித்தது, ஆம், ஒளியும் கருவிழியும் அவர்களே! அ(க)க் கண்களை கக்கும் இமையாக, இமயமாக ஒவ்வொருவரும் இருப்பது அவசியம். எனவேதான் பெண்கள் விஷயத்தில் பொறுப்போடு நடந்து கொள்ளும் படி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தமது இறுதி நாளில் கூட உறுதியாகக் கூறிச் சென்றார்கள். அந்தோ பரிதாபம்! அந்தக் கண்களுக்கு மைதீட்டி அழகு பார்க்க வேண்டாம்!, குறைந்த பட்சம் அவைகளைக் குத்திக் கோரப்படுத்தி குருடாக்காமலிருந்தாலே நன்றல்லவா!சீதனப் பெரும் புயலில் சிக்குண்டு தம் வசந்தமிகு இளமைச் சிறகுகளை இழந்து தவிக்கும் இந்த கன்னி பறவைகள், பாதுகாப்புடன் தங்குவதற்குரிய கூடு ஒன்றை கட்டுவதற்குக் கூட யாரும் ஒன்று கூடவில்லையே! தன் வாசத்தையும் இமையென காக்க வல்ல நம் மீது வைத்திருந்த விசுவாசத்தையும் இழந்து, சிறுகச் சிறுக எஞ்சிய தன் சுவாசத்தையும் இழந்து கொண்டிருக்கும் இந்த கண்ணிகளை ஆசுவாசப்படுத்த எவ்விதப் பிரயத்தனமும் யாரும் எடுக்காமலிருப்பதின் மர்மம் தான் என்னவோ! எவ்விதத்திலும் ஒவ்வாத நம் திருமண நடைமுறை நிபந்தனைகள் எனும் பேரலைகளுக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல் தத்தளிக்கும் அவர்களின் வாழ்க்கைப் படகை அக்கறையுடன் கரை சேர்த்து, சூழ்ந்துள்ள அபாயம் நீக்கி அபயம் நல்கி ஆறுதல் அளித்திடும் நாள் என்றுதான் விடியுமோ!


கைகூலி எனும் இந்த சீதன அரக்கனின் அக்கினிப் பார்வையால் அக்கன்னிப் பாவைகளின் வால்வுகள் எரிந்து, கருகி சருகாகி விட்டதால், காலக் கைதிகளாகி, இருட்டு உலகின் கதாநாயகிகளாகி விட்ட நிலையில் உள்ளார்கள். இவர்களின் பலர், திருமணத்தை நுகர்ந்திடும் வாய்ப்பில்லாமலேயே விதவைக் கோலம் பூண்டு நித்திய காலமும் இத்தாவில் இருப்பவர்கள் போல் வாழ்கையை மேற்கொள்கிரார்கள். இந்நிலை எண்ணி, தன் நிலை மறந்து, மன நிலை பாதித்து பைத்தியமாகி விட்டவர்களுமுண்டு. குமுறிய இதயத்துடன் மரணத்தைத் தழுவி மண்ணுக்குள் குமர்களாகவே புதைந்து விட்டவர்களுமுண்டு.


“தற்கொலைக்கு இஸ்லாம் அனுமதியளித்திருந்தால், இன்று கிணறுகள் பல முஸ்லிம் குமர்களால் நிறைந்திருக்கும்” என ஒரு சமுதாயக் கவிஞர் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தகு சீதனக் கொடுமையில் சிக்குண்ட ஒரு முஸ்லிம் சகோதரியை நாம் கண்டு கொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டிருந்தால், மாற்று மதத்தைச் சார்ந்த இரு கண்களை இழந்த குருடர் ஒருவரை அப்பெண் திருமணம் செய்து கொண்டாள் என்ற திடுக்கிடும் சம்பவம், குமர்கள் விஷயத்தில் இன்னும் குருடர்களாகவே நம் சமுதாயம் இருக்கிறது என்ற நெருடலான உண்மையை வெளிச்சம் போட்டல்லவா காட்டிற்று.


பெண்களாகப் பிறந்துவிட்டால் திருமண எல்லையை அடைவதற்கு, வழியில் அவர்கள் மேகொள்ளும் முள் வேலிகளும் தடைக் கற்களும் தான் எத்துனை! எத்துணையுமின்றி நாடு வழியில் திகைத்து நிற்கும் அவர்களின் நெஞ்சங்களில் சுளன்று கொண்டிருக்கும் எரிமலை என்று வெடித்துச் சிதறுமோ? நாம் அறியோம்! பூமி மூச்சுவிட்டால் அது பூகம்பம், இப்பூவையர்களின் இதயங்கள் மூச்சு விட்டாலோ அங்கு பூகம்பத்துடன் எரிமலையும் சங்கமம். நடைபாதையில் தென்படும் இடர்தரும் கற்கள், முட்கள் போன்றவற்றை அகற்றுவது தருமம். இம்மாதர்களின் வாழ்க்கைப் பாதையில் மலையென குவிந்து கிடக்கும் சுடும் பாறாங் கற்களை அகற்றிட முனையாது பராமுகமாகவும், நாமே அவர்களுக்குப் பாரமாக இருப்பதும் எந்த தர்மத்தைச் சாரும்?


மிக எளிய முறையில் நடை பெறும் திருமணமே சிறப்பானதென இஸ்லாம் கூறியிருக்க, தட்சணையாக உயர் தங்க ஆபரணங்களும், வரதட்சணையாக பல லட்சங்களும் கேட்டு நிற்பது மிக கேவலத்துக்குரியதாக உள்ளது இதுபற்றியெல்லாம் கவலை கொள்ளாது, நம் முஸ்லிம் சகோதரர்கள் இருப்பது வேதனை, வேடிக்கை.


முஸ்லிம்கள் செறிந்து வாழும் நகரங்களில் கூட இதே கதிதான். உலமாக்களும் ஊர் பிரமுகர்கள் பலரும் இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதது ஏனோ! வார, மாத தொடர் சொற் பொழிவுகளிலும் கூட சீதனக் கொடுமை பற்றி அலசாமலிருப்பது ஏனோ தெரியவில்லை. அங்கெல்லாம் குமர்கள் குறைவேதுமில்லா முழு வாழ்வு வாழ்கிறார்கள் என்ற மாய உணர்வையல்லவா தோற்றுவிக்கின்றது. ஆனால், உண்மை நிலை என்னவெனில் இதுபோன்ற சில கிராமங்களிலும் நகரங்களிலும் குமர்களும், அவர்களின் பெற்றோர்களும் அனுதினமும் இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டு, விடியலை நோக்கி விரக்திப் பார்வையைச் செலுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்காததால் நாற்பது வயதை அடைந்தும் திருமணமின்றி தன் விதியை நொந்து தன் வயதையொத்த தோழிகள் (பேரப்) பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ, இவர்களோ தொலைந்து விட்ட தம் இளமைப் பருவத்தை மீண்டும் எதிர் நோக்கி ஏங்கி நிற்கின்றனர்.


வாழ்க்கையில் ஒரு பெண்ணின் பூரண மகிழ்வு உதயமாகும் நாள் மண நாளல்லவா! எத்தனை எத்தனை இன்பக் கற்பனைகள் அவள் இதயத்தைக் குளிரூட்ட, அவை வதனத்தில் புன்முறுவலாக பூத்துக் குலுங்கும் நாளல்லவா! இன்பக் கனவுகளில் திளைத்திருக்க வேண்டிய மணப் பெண்களில் சிலர் மண மேடையிலேயே கண்ணீர் சிந்திய நிகழ்வுகள் யாவும் சீதனப் பேயின் கோர விளையாட்டினாலன்றோ! சமுதாயக் காட்சிகளும், சமூக இயக்கங்களும், உலமாக்களும், ஊர் பிரமுகர்களும் இப்பிரச்சினைக்கு தீர்வுகான வரிந்து கட்டி வராவிட்டாலும், சரிந்து கிடக்கின்ற இவர்களின் நிலையை சரிசெய்து நிறுத்திட, குறைந்த பட்சம் குரலாவது கொடுக்கலாமல்லவா!


பெண் பிள்ளை பிறந்துவிட்டதென்றால் பல பெற்றோர்களின் உள்ளங்களில் இடி விழுந்தது போன்ற உணர்வு! இதயங்களில் இவள் பற்றிய பயங்கரமான அபாயக் கனவு! கவலையின் ரேகைகள் அவர்களது வதனத்தில் உடனே கூடு கட்ட ஆரம்பித்துவிடுகின்றன. நண்பர்கள், சுற்றத்தார் போன்றோரின் பரிதாபப் பார்வைகளே அவர்களைச் சூழ்ந்து சங்கடப்படுத்துகின்றன. இத்தகு சங்கடங்களில் உறைந்து போய், போலிப் புன்னகைப் போர்வைக்குள் தங்களைப் போர்த்திக் கொள்கின்றனர்.


இத்தகு பரிதாப நிலை இன்று ஏற்பட்டதல்ல. இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே பெண்பிள்ளை பிறந்துவிட்ட சுபச் செய்தியை கேட்டதும், அபச் செய்தியாகக் கருதி தன்னை மக்களின் பார்வையிலிருந்து மறைத்துக் கொள்ளும் நிலையிலுள்ள பெற்றோரின் எண்ண உணர்வுகளை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிடும் முகமாகவே மேற்கண்ட இறைவசனம் இறங்கியது.