www.womanofislam.com

Muslim women's online learning centre

கணவனின் அக்கறையும் அலட்சியம் செய்யும் பெண்களும்பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய. எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க. ரோஜாவிடம் சொன்னது முள்.


இந்த கவிதை மலருக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொருந்தும். ரோஜாவை போன்ற மென்மையும், தன்மையும் கொண்ட பெண்களை முள்ளை போல் இருந்து காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆணுக்கும் உண்டு. அந்த பொறுப்பை சில ஆண்கள் சரிவர நிறைவேற்ற முற்படும்போது, சில நேரங்களில் பெண்கள் பக்கத்தில் இருந்து அவற்றுக்கு எதிர்ப்பும் கோபமும் ஏற்படுவதும், இதனால் பல குடும்பங்கள் சந்தி சிரிப்பதும் இன்று சமூகத்தில் அதிகமாக காணக் கிடைக்கிறது.


​​எனவே, குறித்த ஆண்களும் பெண்களும் தம் பொறுப்புகளை சரிவர விளங்கி கொள்ளும் நோக்கில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கண்டிப்பாக வாசித்து வாழ்க்கையில் அமுல்படுத்துங்கள்.​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரியாவீர்கள். ஒவ்வொருவரும் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள். ஒரு ஆண் அவர் மனைவி குறித்து பொறுப்புதாரியாவார். அவரின் பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கு பொறுப்புதாரியாவாள். அவள் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவாள்.”


பொறுப்பு என்று சொல்லும்போது மனைவிக்கு உணவளிப்பது, உடையளிப்பது, அவளின் இதர அடிப்படை தேவைகளான வீடு, மருத்துவ வசதிகள், வாகன வசதிகள் என தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது மட்டுமல்ல. அவளை நல்ல முறையில் பாதுகாப்பதும் ஒரு கணவனின் மிக பெரிய பொறுப்பாகும்.


பெண்ணின் மிக சிறந்த ஆபணம் அவளின் நல்லொழுக்கம் ஆகும். அத்தகைய அவளின் நல்லொழுக்கத்துக்கும் அவளின் கண்ணியத்திற்கும் எவ்வித சேதமும் ஏற்படா வண்ணம் அவளை பாதுகாப்பது ஒரு கணவனின் கட்டாய கடமையாகும்.


எல்லா பெண்களும் ஒரே விதமான அறிவோடும் ஒரே விதமான சிந்தனையோடும் இருப்பதில்லை. சிலருக்கு பெரிய தவறுகள் சிறிய தவறுகளாக தெரியும். இன்னும் சிலருக்கோ தவறுகள் தவறாகவே தெரிவதில்லை. காரணம் அவள் வாழ்ந்த குடும்ப சூழ்நிலை, அவள் வாழ்ந்த சமூக கலாச்சார சூழல், நெருங்கி பழகிய நண்பிகள், அவளது கல்வி முறைமை போன்றன அவளின் நடத்தையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


இதன்படி மார்க்க அறிவும், பற்றும் இல்லாத பின்னணியில் இருந்து வந்த ஒரு பெண் மார்க்கத்தை சரிவர பின்பற்றக்கூடிய ஒரு ஆணை திருமணம் செய்யும்போது கண்டிப்பாக அவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் தோன்றவே செய்யும். அவளது உடை விசயத்தில் ஆரம்பித்து வணக்க வழிபாடுகள், கொள்கைகள், வாழ்க்கை முறைமை என எல்லாவற்றிலும் கருத்து முரண்பாடு கண்டிப்பாக தோன்றவே செய்யும்.


இந்த சூழ்நிலையில் அவள் தவறுதலாக நடக்கும்போது, மனைவி கோபப்படுவாள், இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுவிடும் என பயந்து ஒரு கணவன் அவள் பிழையை திருத்தாமல் இருந்து விட கூடாது. அது தவறாகும். அதனால், ஒரு கணவன் தன் பொறுப்பை பாழ்படுத்திய மனிதர்களின் கூட்டத்தில் சேர்ந்து விடுகிறான். தவறான வழியில் உள்ள மனைவியை நேர்படுத்த முடியாத ஒரு கோழையாக பார்க்கப்படுகிறான்.


அதேநேரம், அவளின் அறிவுக்கும் சிந்தனா சக்திக்கும் புரியும் வகையில் நல்ல முறையில் அவளை திருத்த வேண்டும். மென்மையாகவும் தனிமையிலும் திருத்த வேண்டும். கோபமாக முகத்தில் பாய்வது, சீறுவது, திட்டுவது கூடாது. இவைகள் மோசமான சீர்திருத்தமாகும். இவற்றை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.


பிழை செய்யும் மனைவி ஒரே நாளிலே பெண் இறைநேசர் ஹஸ்ரத் ராபியா பஸ்ரியாவாக மாறவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. அது முடியாது. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று சொல்வது போல கொஞ்சம் கொஞ்சமாக, மெது மெதுவாக கூறி அவளுக்கு விளங்க வைத்து நல்வழிக்கு கொண்டு வரவேண்டும்.


அதேநேரம், ஒரு மனைவி தன் கணவன் தனக்கு புத்திமதி சொல்லும்போது அல்லது ஆலோசனை கூறும்போது அவற்றை விரும்பி கேட்க வேண்டும். காது கொடுத்து கேட்க வேண்டும். கோபப்படவோ, எரிச்சல் படவோ கூடாது. நீங்கள் யாரு எனக்கு அறிவுரை கூற என்று முகத்தில் பாய கூடாது. நான் இதுவரை எப்படி இருந்தேனோ அப்படிதான் இருப்பேன், உங்களுக்காக மாற மாட்டேன் என்று வம்பிழுக்க கூடாது.


தன் உறவினர் பேச்சை கேட்டோ, தவறான நண்பிகளின் பேச்சை கேட்டோ ஒரு நல்ல கணவனுக்கு எதிராக செயற்பட கூடாது. ஏனென்றால் இன்று மேலைநாட்டு பாணியில் பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்ற போர்வையில் கணவன் சொல் கேட்க கூடாது, அவ்வாறு கேட்டு கீழ்படிவது பெண் அடிமைத்தனம் என நினைத்து நிறைய பெண்கள் தாமும் கீழ்த்தர வாழ்க்கை வாழ்ந்து மற்ற பெண்களையும் அவ்வாறு வாழுமாறு தூண்டி கொண்டு உள்ளனர். அந்த வலையில் சிக்கி விடாதீர்கள்.


ஒரு நல்ல பெண் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்றால், தன் கணவன் கூறும் கருத்துக்களை மார்க்கம் என்னும் நீதி தராசில் வைத்து அளந்து பார்க்க வேண்டும். தன் புத்தியை பயன்படுத்தி அவன் கூறுவது மார்க்கத்திற்கு பொருத்தமானதா? இதனையா இறைவனும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களும் போதிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அப்படிதான் என்றால் கண்டிப்பாக அவற்றை கேட்டு ஒழுகி நடக்க வேண்டும்.


கணவனுக்கு பிடிக்காதவர்களுடன் கண்டிப்பாக எவ்வித நட்பும் உறவும் கொள்ள கூடாது. ஆயிரம் பேர் ஆயிரம் கூறினாலும் கணவனுடன் ஆலோசனை செய்து எது பற்றியும் முடிவு எடுக்க வேண்டும். ஏனெனில், எல்லோரும் புத்தி சொல்லுவர், ஆனால் நாளை பிரச்சினை என்று வந்துவிட்டால் யாரும் துணைக்கு நிற்க மாட்டார்கள். யாரும் கை கொடுத்து உதவ மாட்டார்கள். ஏசினாலும் பேசினாலும் உங்கள் வாழ்க்கை துணையான உங்கள் கணவன் தான் உங்களுடன் கடைசி வரை கூட நிற்பார். உங்களுக்கு பிரச்சினை என்றால் கஷ்டப்பட போவதும் அவர்தான், நீங்கள் அழும்போது உங்களுக்கு தோள் கொடுப்பதும் அவர்தான். உங்களுக்காக அழ போவதும் அவர்தான்.


எனவே, கணவன் உங்கள் மீது அக்கறை கொண்டு கூறும் புத்திமதிகளை கேட்டு தெளிவு பெற்று அவற்றின் படி ஒழுகி நடவுங்கள். மேலை நாட்டு கலாசார பாணியில் பெண்கள் சுதந்திரம், பெண்கள் உரிமை என்று கூறி நல்ல கணவனுக்கு மாறு செய்து அல்லாஹ்வினதும் அவனது அருமை தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களினதும் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகி உங்களை நீங்களே நாசப்படுத்தி கொள்ள வேண்டாம்.


//பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய. எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க. ரோஜாவிடம் சொன்னது முள்//


அன்னியவர்கள் உங்களை ஏமாற்றி உங்களை கொண்டு ஏதேனும் விதத்தில் பயனடையவே முயற்சி செய்வர். ஆனால் அத்தகைய அனைத்து விதமான சூழ்ச்சிகளில் இருந்தும் உங்களை பாதுகாத்து உங்களை கரை சேர்க்க என்றும் துணை நிற்பவர் உங்கள் கணவர்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.