www.womanofislam.com

Muslim women's online learning centre

அன்பு - உன் எதிரியையும் அன்பனாக்கும்


ஒரு நாள் காலைப் பொழுது. ஒரு பெரிய மூட்டையை சுமந்து கொண்டு ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மக்கா நகரின் ஓரமாக தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வந்தார்கள். பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வழமை போல அம்மூதாட்டியை அணுகி, “தாயே! நீங்கள் விரும்பினால் உங்கள் துணிமூட்டைகளை என்னிடம் தாருங்கள்! நான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று சொன்னார்கள்.


“ரொம்ப நன்றி” என்று கூறி அம்மூதாட்டி துணி மூட்டையை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்களிடம் கொடுத்தாள்.


“திரு மக்காவை விட்டு எங்கே அம்மா போகிறீர்கள்?” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கேட்டார்கள்.


தன்னோடு உரையாடுவது முஹம்மது நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்பதை அறியாத அம்மூதாட்டி “மக்கமா நகரில் முஹம்மது என்கின்ற ஒரு மனிதர் வந்துள்ளாராம். அவர் இறைவனின் இறுதித் தூதராம். முந்தைய வேதங்கள் எல்லாம் செயலிழந்து போய்விட்டதாம். அனைவரும் அவரது நேரான வழியை பின்பற்ற வேண்டும் என்கிறாராம். நான் ஒரு யஹூதிப் பெண். எனது மார்க்கத்தை நான் எப்படி விட முடியும்? எங்களது ஜனங்கள் அவரைப் பற்றி பலதும் கூறுகிறார்கள். அவர் இருக்கும் மக்காவில் வாழ எனக்கு விருப்பமில்லை. அதுதான் ஊரை விட்டே கிளம்பி விட்டேன்” என அம்மூதாட்டி கூறினார்.


அதைக் கேட்டு கொண்டு அமைதியாக வந்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள். வழியெல்லாம் அம்மூதாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்களை பற்றி முன்பு கூறியது போன்று கூறி கொண்டு வந்தார். பொறுமையின் சிகரமான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பொறுமையோடும் புன்முறுவல் பூத்தவர்களாகவும் நடந்து சென்றார்கள். அப்போது அம்மூதாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சிரிப்பில் பிரகாசத்தையும் முகத்தில் பணிவையும் அவதானித்தார்.


கடைசியில் அம்மூதாட்டி சொன்ன இடம் வந்தது. மூட்டையை இறக்கி அம்மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு “நான் போய் வருகிறேன் தாயே” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் விடைபெற்றார்கள்.


மிகவும் மகிழ்ச்சியடைந்த அம்மூதாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்களை பார்த்து “இந்த சில்லறைகளை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி சில திர்ஹம்களை நீட்டினார். அதற்கு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் “வேண்டாம் அம்மா, நான் இதனை பணத்திற்காக செய்யவில்லை” என கூறி உறுதியாக மறுத்துவிட்டார்கள்.


கொள்ளைக் கூட்டம் நிறைந்த இந்த ஊரில் இப்படியும் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதரா? என்று வியந்த அம்மூதாட்டி “கருணை உள்ளம் படைத்தவரே, உங்கள் பெயரையாவது சொல்லிவிட்டு செல்லுங்கள்” என்று கூறினார்.


அப்போது நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக “நீங்கள் யாருடைய போதனைக்குப் பயந்து இந்த ஊரைவிட்டு போகிறீர்களோ, அந்த முஹம்மது நான்தான்” என்று கூறினார்கள். அதனை கேட்ட அம்மூதாட்டி அதிசயித்து நின்றார். அவரின் கண்கள் கண்ணீரை சொரிந்தன. இவ்வளவு நற்குணம் படைத்த ஒருவரையா சரியாக புரிந்துக்கொள்ளாமல் நான் தப்பாக பேசினேன் என்று உள்ளத்தால் அழுதார். நிச்சயமாக நற்குணத்தின் சிகரமான இந்த புனிதர் வழிகெடுப்பவராக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அம்மூதாட்டி அடுத்த கணம் இஸ்லாத்தைத் தழுவினார்.இதில் படிக்க வேண்டிய பல பாடங்கள் உள்ளன.

1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மூதாட்டிக்கு உதவும்போது அவளது சாதி சமயத்தைப் பார்க்கவில்லை. அங்கே மதத்தை தாண்டி மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு எடுத்து சொன்னார்கள்.


2. தன்னை பற்றி அம்மூதாட்டி கூறிய வசை மொழிகளை பெருந்தன்மையோடு சகித்துக் கொண்டார்கள். இதில் பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை மன்னிக்கும் மனப்பான்மை ஆகியவற்றை உலகிற்கு எடுத்து காட்டினார்கள்.


3.கடைசியாக! தன்னை எதிரியாக பார்த்த ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் திருப்பி கொடுத்தது - “அன்பு”. கடைசியில் எதிரி அன்பரானார்.


*********************************************************************************************************************


அன்பினால்: இருள் வெளிச்சம் ஆகும்

அன்பினால்: கசப்பு இனிமை ஆகும்

அன்பினால்: வேதனை சுகமாகும்


மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹிஇமாம் ஹஸன், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்வினிலே

இது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்

தோள் கொடுத்த

தூய நபி ﷺ

அன்னவர்கள்


சிந்திய உணவு 

பொறுமையில் முன்மாதிரி