www.womanofislam.com

Muslim women's online learning centre

இல்லறமே நல்லறம்


உயர் வாழ்க்கையின் உரமே திருமணமாகும். நல்லரவாழ்வு இவ்வுலகத்தின் இன்பங்கள் பொங்கி வழிகின்ற தேன் ஊற்றாகும். இந்த இல்லற வாழ்க்கையின் மூலம் நல்ல சந்ததிகளைப் பெற்று பெருவாழ்வு வாழ வழிவகுக்கும் ஒரு உன்னத வழிமுறையாகும். மேலும் இறைவனின் பேரருளை அடைவதற்கு ஒரு வெற்றிப் பாதையாக அமைவது இத்திருமணமே.


இல்லறமேற்ற தம்பதிகள் ஒருவரை ஒருவர் விரும்பக்கூடியவர்கலாக இருத்தல் வேண்டும் என்பதை இறைவன் வான்மறை மூலம் தெளிவுபடுத்துகின்றான். நீங்கள் பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹரைக் கொடுத்து மனம்புரியுங்கள் என்றும் கூறுகின்றான்.


ஒரு மனிதனின் வாழ்வு இல்லறத்தினால்தான் நிறைவு பெறுகிறது. துறவறம் என்பதை இஸ்லாம் விரும்பவில்லை. துறவு வாழ்வு என்பது மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது. இல்லறத்தின்மீது மனித குலத்திற்கு இரண பாக்கியம் வழங்கப்படுகிறது.


​இல்லறமென்பது என் வழிமுறை, அந்த இல்லறச் சோலையில் அடியெடுத்து வைக்காதவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் அன்று என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவ்வில்லறத்தை நல்லறமாக்கும் யுக்திகளையும் நமக்குக் காட்டித் தந்துள்ளார்கள்.


உங்களில் எவர் மணமுடிக்க உடல், பொருளால் சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ அவர் இல்லறமெனும் நல்லறச் சோலையில் நுழைந்து கொள்ளட்டும். அது அவர்மீது கடமையாகும். அவ்வாறு சக்தி பெறாதவன் இறைவணக்கத்தில் ஈடுபடட்டும். அது அவருடைய நெறி வாழ்க்கையைக் காப்பாற்றக்கூடியதாகும்.


தன் மானத்தை மறைத்துக் கொள்ள ஆடை எவ்வளவு அவசியமோ, அத்தனை அவசியமாய் “இல்லறத்தில் இணையக்கூடிய இரு மனங்கள் ஒருவரை மற்றொருவர் கண்ணியப்படுத்தி சமூக அந்தஸ்துடன் வாழ வேண்டும் என்பதை அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.” என இயம்புகிறது எழில் வான்மறை.


இல்லறத்தில் இணைந்த பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பெண்களில் சிறந்தவர் யார் எனப் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வினவப்பட்ட போது கணவன் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பவளும், அவன் கட்டளையிடும் போது அவனுக்குக் கீழ்ப்பணிகின்றவளும், அவன் வெறுக்கும் விடயத்தில் தன்னாலும் தன் சொத்தாலும் அவனுக்கு விரோதம் செய்யாது இருப்பவளும் ஆவாள் என்று அருளுரை பகர்ந்தார்கள்.


உலகம் முழுவதும் சுகப் பொருளாகும். மேலும் உலகப் பொருள்களில் மேலானது நல்லொழுக்கமுள்ள ஸாலிஹான மனைவியே என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்.


இல்லற வாழ்க்கையில் துன்ப, துயரங்கள் ஏற்படும் போது எவர், ஒருவருக்கொருவர் எதிரிகளைப் போல் போர்புரியாமல் தான் உயர்வு பெற தன் மனைவியின் துர்க்குணத்தின்மீது பொறுமை கொள்வாரோ, அவருக்கு ஐயூப் நபியின் கூலியும், எந்தப் பெண் தன் கணவனின் துர்க்குணத்தின்மீது பொறுமை கொள்வாளோ, அவளுக்கு ஆசியா, மர்யம் அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரின் கூலியும் கொடுக்கப்படும் என சுப செய்தி சொன்னார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்.

மனைவிக்கு உபதேசம் வழங்கிய நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கணவனுக்கு உபதேசம் கூறத்தவறவில்லை. உங்களில் சிறந்தவர், உங்கள் குடும்பத்தில் சிறந்தவர். நான் எனது குடும்பத்திற்கு மிகச் சிறந்தவனாக இருக்கிறேன் எனப் பகர்ந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்.


கணவன் தன் மனைவிக்கு உணவளிக்கக் கடமைப்பட்டவன். ஆயினும் ஒரு கவள உணவை அவளது வாயில் ஊட்டுவது இறைவனின் உயர்வான பொருத்தத்திற்கு உரியதாகும்.


இறைமொழியையும், நபிவழியையும் தன் இல்லற வாழ்க்கையில் இணைத்து வாழ்கின்ற சான்றோர்கள், “எங்கள் இறைவனே! எங்களுக்குக் கண்குளிர்ச்சியான மனைவி மக்களைத் தருவாயாக!” எனப் பிரார்த்திப்பார்கள் என்று தேன்மறை மூலம் தெளிவுபடுத்தும் இறைவன், மனைவி மூலம் கணவன் சாந்தி பெற இறைப் பிரார்த்தனை அவசியம் என வலியுறுத்திக் காட்டுகிறான்.


​அது இறைநெறி முறையையும், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வழிமுறையையும், இறைநேசர்களின் இல்வாழ்க்கை முறையையும் நல்வாழ்வில் அமைத்துக்கொண்டால் நம் இல்வாழ்வில் முழு மனநிறைவு அடையமுடியும் எபதில் எள்ளளவும் ஐயமில்லை. வல்ல அல்லாஹ் அவ்வாறு வாழ நல்லருள் புரிவானாக! ஆமீன்!!!