www.womanofislam.com

Muslim women's online learning centre

எளிமையும், சேமிப்பும்


​​​இஸ்லாம் இம்மைக்கும், மறுமைக்கும் வழிகாட்டும் மார்க்கமாகும். அது எளிமையையே விரும்புகிறது. எளிமையான வாழ்வு இயற்கையோடு ஒட்டியது. மனதுக்கு இதமானது; உடலுக்கு ஆரோக்கியமானது. எளிமையான வாழ்க்கை என்றால் தேவையை பூர்த்தி செய்யாது கைவிடல் என்பது பொருளாகாது. இருப்பதைக் கொண்டு திருப்தியடைதலும் தேவையை சிக்கனமாகவும், கச்சிதமாகவும் நிறைவேற்றிக் கொள்வதும் இதன் பொருள் ஆகும். எளிமையான வாழ்வை விரும்பும் அல்லாஹ் இது குறித்து அல்குர்ஆனில் எமக்குப் போதனை செய்துள்ளான்.


“உண்ணுங்கள், பருகுங்கள், ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை” (17:31) “அளவு கடந்து வீண் விரயம் செய்யதிருப்பீராக நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரராக இருக்கின்றனர்” (17: 26, 27)


கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் எப்போதும் எளிமையையே விரும்பி வந்துள்ளார்கள். அன்னவர்கள் வாழ்வின் பல்வேறு நிகழ்ச்சிகளில் இதனைக் காணலாம். அன்னவர்கள் ஈச்சோலைப் பாயின் மீது படுத்துறங்கினார்கள். இதனால் அன்னவர்களது விலாப்புறங்களில் அதன் அடையாளம் பதிந்திருந்தது. இதனைக் கண்ணுற்ற தோழர்கள் “உங்களுக்கு நாம் மெத்தை ஒன்று தயார் செய்து தருகின்றோம்” என்று கூறினார்கள்.


அப்போது கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இவ்வுலகில் தனது நிலை பற்றி விளங்கினார்கள். பிரயாணி ஒருவன் மரநிழலில் தங்கி விட்டுச் செல்வது போன்றே இவ்வுலகில் தான் இருந்து விட்டுச் செல்ல விரும்புவதாக அன்னவர்கள் கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம்)

இந்நிகழ்ச்சி கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் எளிமையான வாழ்வுக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் அறிவுரையை முற்று முழுதாக பின்பற்றிய தோழர்களும் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தனர். அவர்களின் பலரின் வரலாறு இதற்கு சான்றாகும்.


முதலாவது கலிபாவான அபூபக்கர் (ரலியல்லஹு அன்ஹு) அவர்கள் பொது நிதியிலிருந்து மிகக் குறைந்த சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு மிக எளிமையான வாழ்க்கை நடாத்தினார்கள். இரண்டாம் கலிபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் இதே பழக்கத்தையே கைக்கொண்டார்கள். நாட்டின் கலீபாக்களாக சேவை செய்த இவர்கள் தாம் விரும்பியிருந்தால் கொளுத்த சம்பளம் பெற்றுக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்தி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவர்களின் குடும்பத்தினர் கூட எளிமையையே பின்பற்றினர்.


தொடக்கத்தில் கண்ட அல்குர்ஆன் வசனத்தில் அத்தியாவசியத் தேவையான உணவு, பானம் இரண்டிலும் ஆடம்பரம் செய்ய வேண்டாமெனப் போதனை செய்யப்பட்டுள்ளது. எனவே இவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு ஆடை அணிகள், உறைவிடம், மின்சாரம் போன்ற அனைத்து பாவனையிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை நீங்கள் மிக இலகுவாக விளங்கலாம்.


இதனால் தான் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் போது கூட வீண் விரயம் செய்வதை சட்ட அறிஞர் தடுத்துள்ளதைக் காண்கிறோம். இதற்கு ஓர் உதாரணம் வுழூச் செய்யும் போது ஒவ்வோர் உறுப்பையும் மூன்று முறை கழுவுவது ஸுன்னத்தாகும். ஆனால் அதற்கு மேலதிகமாகக் கழுவுவது மக்ரூஹ் என சட்ட அறிஞர்கள் வகுத்துள்ளனர். வீண் விரயத்தைத் தவிர்த்து கச்சிதமாக தேவையை நிறைவு செய்து எளிமையான வாழ்க்கை நடத்தும்போது இயல்பாகவே சிக்கனம் பேணப்படுகிறது. அதாவது இயற்கை வளங்கள் எதுவும் வீணாக்கப்படுவதில்லை. இதனால் செல்வமும் வளங்களும் மீதப்படுகின்றன. எனவே இஸ்லாம் கூறும் எளிமையைக் கடைபிடிப்பதன் மூலம் இயல்பான சேமிப்பு ஏற்படுகிறது.


வீண் விரயம் செய்வதை விரும்பாததுடன் தம்மிடமிருக்கும் செல்வத்தை ஒட்டுமொத்தமாக வாரிவழங்கி விட்டுத் தான் சிரமப்படுவதையும் அல்லாஹ் விரும்பவில்லை. அல்லாஹ் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு உபதேசிக்கும்போது “ஈயாது கருமியாகவோ, எல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்துவிட்டு வறுமையில் உழல்பவராகவோ இருக்க வேண்டாம்” என்கிறான்.


இவ்வுபதேசம் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு மட்டும் உரியதல்ல. முழு மனித சமூகத்துக்கும் பொதுவானதாகும். எனவே இருப்பதை எல்லாம் வாரி இறைத்து விடுவது இஸ்லாமிய வழிமுறையாக மாட்டாதென்பதும் தமக்கென சேமித்து வைத்துக் கொள்வது பாதுகாப்பான வழி என்றும் தெளிவாகின்றது.


கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் அறிவுரையும் இவ்வடிப்படையிலே அமைந்துள்ளதைக் காணலாம். “உங்கள் பிள்ளைகளை யாசகர்களாக விட்டுச் செல்வதை விட செல்வந்தர்களாக விட்டுச் செல்வது மேலானது.” (புகாரி) என அன்னவர்கள் கூறியுள்ளார்கள். மரணிக்கும்போது ஒன்றையும் விட்டு வைக்காது வெறுமனே மரணிப்பதைவிட தமது பராமரிப்பிலிருப்போருக்காக ஏதாவது சேமித்து விட்டு மரணிப்பது சிறந்தது என்பது இதன் பொருளாகும்.


இந்த அடிப்படையிலேயே மரித்தவரின் சொத்துகளைப் பிரித்து பகிர்ந்தளித்தல் சம்பந்தமான சட்டவிதிகள் அல்குர்ஆனிலே விளக்கப்பட்டிருப்பதை காண்கிறோம். இதிலிருந்து இன்னுமொரு உண்மை தெளிவாகின்றது. ஒருவரது சேமிப்பு என்பது சேமித்து வைக்கப்பட்ட பணம் மாத்திரம் அன்று. அவர் வசமுள்ள வீடு, தோட்டம், வயல், வாகனம், வர்த்தக நிலையம் போன்ற சொத்துக்களும் சேமிப்பிலேயே அடங்கும் என்பது அவ்வுண்மை ஆகும்.


மேற்கண்ட அறிவுரைகளின் அடிப்படையில் தனக்கும் தனது பராமரிப்பிலிருப்போருக்கும் ஒருவருட காலத்தில் போதிய செல்வத்தையும் பண்டங்களையும் சேமித்து வைத்துக் கொள்ள சட்ட அறிஞர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். இது சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சேமிப்புப் பற்றி பேசும் நாம் சேமிக்கும் வழி பற்றியும் சிந்திக்க வேண்டும். பொருளைச் சேர்ப்பதற்கு இஸ்லாம் விதிமுறைகளை வழங்கியிருப்பது போன்றே அதனைச் சேமித்து வைப்பதற்கான வழிமுறைகளையும் அது வழங்கியுள்ளது. எனவே அனுமதிக்கப்பட்ட முறைகளில் மட்டுமே எமது சேமிப்பு அமைதல் மிகப் பிரதானமானதாகும். ஆதலால் நாமும் சிக்கனத்தை கடைப்பிடித்து சேமிக்கப்பழகிக் கொள்வோம். எளிமையாக நடந்து இன்புற்று வாழ்வோம்.